search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட முழுவதும்"

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
    புதுக்கோட்டை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி புதுக்கோட்டை நகரில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் நகரின் முக்கிய வீதிகளாக கீழராஜவீதி, மேலராஜவீதி போன்றவை வெறிச்சோடி காணப்பட்டது.



    இந்நிலையில் காலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன்அரசு தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஒவ்வொரு வீதிகள் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று மூடி இருந்த கடைகளை பார்வையிட்டனர். மேலும் அறந்தாங்கி மற்றும் ஆலங்குடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் மாவட்டத்தில் பிறபகுதிகளில் உள்ள ஒரு சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டு இருந்தது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இ தற்கு ரகுபதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் தி.மு.க.வினர் 35 பேரை கைது செய்து, புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் முகமதுகனி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் முகமதுசுல்தான் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கந்தர்வகோட்டை பஸ் நிலையம் முன்பு தி.மு.க. ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 25 பேரையும், ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 28 பேரையும், கீரனூர் கடைவீதியில் தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப் பாளர் செல்லபாண்டியன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 150 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விராலிமலை செக்போஸ்ட் பகுதியில் விராலிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்குமரன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இரு சக்கர வாகனத்தை பழுது நீக்குவோர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் கருப்புக்கொடியை கையில் ஏந்திவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மேலும் ஆவுடையார்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அறந்தாங்கியில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உதயம்சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. 
    ×